ஸ்கோவ்ஹேகன்: அமெரிக்காவில் 1931ம் ஆண்டு ஒரு பள்ளி ஆசிரியை தனது அம்மாவுக்கு எழுதிய கடிதம், 83 ஆண்டுகள் கழித்து அவரது சகோதரி மகளிடம் டெலிவரி செய்யப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 1931ம் ஆண்டில் மைன் மாகாணத்தில் உள்ள ஸ்கோவ்ஹேகன் நகரில் மிரியம் மேக் மைக்கேல் என்ற 23 வயது பெண், பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். அவர் தனது அம்மா டோலேன்னா மேக் மைக்கேலுக்கு அப்போது 9 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால், அந்த கடிதம் டோலேன்னாவுக்கு போய் சேரவே இல்லை. இப்போது இவர்கள் இருவருமே இறந்து விட்டனர். சமீபத்தில் பிட்ஸ்பீல்டு என்ற ஊரில் உள்ள தபால் நிலையத்தில், மிரியம் மேக் மைக்கேல் எழுதிய கடிதம் சிக்கியது. அதை எடுத்த ஊழியர், தபால் அதிகாரியிடம் அளித்தார்.
அந்த கடிதத்தில் பழைய காலத்து 2 சென்ட் ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்ததும், 1931ல் எழுதப்பட்ட கடிதம் என்பதை கண்டுபிடித்தார். ஆனால் அதை அவர் தூக்கிப் போடவில்லை. அந்த முகவரிக்கு ஆள் அனுப்பி விசாரிக்கச் செய்தார். அங்கு கிடைத்த தகவலைக் கொண்டு, ஒரு வழியாக மிரியம் மேக் மைக்கேலின் சகோதரி மகளும், டோலேன்னாவின் பேத்தியுமான ஆன் மேக் மைக்கேல் என்பவரை கண்டுபிடித்தனர். அவருக்கே இப்போது 69 வயதாகிறது. அவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அதை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தார். இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைப்போம். அமெரிக்காவிலும் ஒரு கடிதம் 83 ஆண்டுகளுக்கு பின் டெலிவரி ஆகியிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். மிரியம் தனது அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில், தான் இவ்வளவு காலதாமதமாக கடிதம் எழுதியதற்கு மன்னிக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த கடிதமும் அவருக்கு போய் சேராமலே போய் விட்டது.