பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றுள்ள பல கோடி மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சங்க தலைவர், துணைத்தலைவர் சிக்குகின்றனர்.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப்பல்லி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்க தலைவராக செர்லபல்லி ராதாகிருஷ்ணன் (வேலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்), துணைத்தலைவர் நரசிம்மன் (அதிமுக கிளை செயலாளர்), சங்க செயலாளர் யுவராஜ் ஆகியோர் உள்ளனர்.இந்த சங்கத்தில் வாங்காத கடனுக்கு நோட்டீஸ் அனுப்பியது, அடகு வைத்த நகைகளை வேறு வங்கியில் அதிக தொகைக்கு வைத்து பணம் சுருட்டியது, போலியான பெயர்களில் கடன் கொடுத்ததாக பணத்தை கையாடல் செய்தது, விவசாயிகள் இருப்பு வைத்த வெல்லத்தை விற்பனை செய்தது என பல கோடி ரூபாய் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.இந்நிலையில் சங்க உறுப்பினர்கள் 18 பேர் பயிர்கடன் பெற்றிருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு வரும்படி கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் விசாரணை அதிகாரி அருட்பெருஞ்ஜோதி சார்பில் பதிவு தபால் அனுப்பப்பட்டிருந்தது. இதனைக்கண்ட அதிர்ச்சி அடைந்த 18 பேரும் மொரசப்பல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றனர். ‘ வாங்காத கடனுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பினீர்கள்? என விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இதை கேட்ட விசாரணை அதிகாரி அருட்பெருஞ்ஜோதி மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் இருப்பு வைத்துள்ள வெல்லத்தை காட்டும்படி விசாரணை அதிகாரி அருட்பெருஞ்ஜோதி கேட்டார். அதற்கு செயலாளர் யுவுராஜ், கமலாபுரம் அருகே உள்ள கோவிந்தராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறினார். அந்த இடத்திற்கு அருட்பெருஞ்ஜோதி சென்று சீல் வைக்க முயன்றார். அப்போது வீட்டிலிருந்த விவசாயி கோவிந்தராஜ், இங்கே இருப்பது எனக்கு சொந்தமான வெல்லம் என்றார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த விசாரணை அதிகாரி செயலாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.அப்போது விவசாயிகள் இருப்பு வைத்திருந்த ரூ. 6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வெல்லம் முறைகேடாக விற்பனை செய்தது சங்க தலைவர் செர்லபல்லி ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் நரசிம்மன் மற்றும் செயலாளர் யுவராஜ் ஆகியோர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து ஆவணங்களை விசாரணை அதிகாரி பறிமுதல் செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக சங்க தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.