புதுடெல்லி:மாஜி மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் இறப்பு விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை மாற்றி எழுத சசி தரூரும், குலாம் நபி ஆசாத்தும் வலியுறுத்தியதாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் ஒருவர் பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.மாஜி மத்திய அமைச்சர் சசி தரூருக்கும் பாகிஸ்தான் பெண் நிருபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து சசி தரூருக்கும், அவரது மனைவி சுனந்தா புஷ்கருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சசிதரூரும், அவரது மனைவியும் டெல்லி வந்தனர். அங்கு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த போது சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு காரணமாக சாப்பிட்டு வந்த மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதற்கிடையில் அவரது உடல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம், மாத்திரையால் உயிரிழக்கவில்லை என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் சுதீர் குப்தா மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், சுனந்தாவின் மரணத்தில் சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லை என அறிக்கை அளிக்கும்படி குலாம்நபி ஆசாத்தும், சசி தரூரும் வலியுறுத்தினர். ஆனால் அதில் சந்தேகப்படும்படியான கூறுகள் இருந்ததால் அது கொலையாகவும் இருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன். எனவே என்னை பழிவாங்கும் நோக்கத்தில் தற்போது எனது பணியிடத்தில் வேறு ஒருவரை நியமிக்க எய்ம்ஸ் நிர்வாகம் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். டாக்டரின் குற்றச்சாட்டால் சுனந்தா புஷ்கர் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.