எந்த முட்டாளும் சிஎம் ஆகலாம்: மாஜி அமைச்சர் சர்ச்சை பேச்சு
ராஞ்சி: எந்த முட்டாளும் ஜார் கண்ட் முதல்வர் ஆகலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்கா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பட்ஜெட் வரும் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து ஜார்கண்ட் மாநில வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பாக ராஞ்சியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா பேசினார். இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இருப்பினும் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஜார்கண்டில் பாஜ அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக யஷ்வந்த்சின்கா அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. அண்மையில் சிறையில் இருந்த யஷ்வந்த் சின்காவை பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜார்கண்ட் முதல்வராகும் தகுதி யஷ்வந்த்சின்காவுக்கு இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தொழிலதிபர்கள் கூட்டத்தில் ஜார்கண்டின் அடுத்த முதல்வர் யார் என செய்தியாளர்கள் யஷ்வந்த்சின்காவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் எரிச்சல் அடைந்த யஷ்வந்த் சின்கா, எந்த முட்டாளும் ஜார்கண்ட் முதல்வராகலாம். யார் வந்தாலும் அதனால் பெரிய வித்தியாசம் ஏற்பட போவதில்லை. வளர்ச்சி தான் மாநிலத்தின் முக்கிய பிரச்னையாக உள்ளது என்றார். சின்காவுக்கு முதல்வர் வேட்பாளராகும் வாய்ப்பு இருக்கும் சூழ்நிலையில் எந்த முட்டாளும் முதல்வர் ஆகலாம் என அவர் பேசியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.