முதல் நாளிலேயே சேதம் அடைந்தது முதல்வர் திறந்து வைத்த பாலம் உடையும் அபாயம்
திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.193.14 கோடி மதிப்பிலான நடந்து முடிந்த பணிகளை திறந்து வைத்தார். இவற்றில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோப்பு&புலிவலம் ரோட்டில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.2.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலமும் அடங்கும். கோப்பு பகுதியில் இருந்து இப்பாலத்தை கடந்து புலிவலம், கொடியாலம் வழியாக முக்கொம்பு செல்ல முடியும். கடந்த 2012ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் மதியம் நடந்த விழாவில் பாலம் திறக்கப்பட்ட நிலையில் மாலையில் பெய்த திடீர் மழை காரணமாக பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.பாலத்தின் இடதுபுறத்தில் பாலத்தையும் ரோட்டையும் சேர்க்கும் பகுதி வழியாக மழைநீர் வழிந்தோடி உள்ளது. இதில் மண் பகுதி முழுவதும் அரிக்கப்பட்ட நிலையில், பாலத்தின் ஒரு பகுதி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புலிவலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில் பாலத்தை கட்டும் போதே இரண்டு பக்கமும் மண் அமைத்து அது கரைந்து போகாமல் இருக்க தடுப்பு கட்டை அமைக்குமாறு கூறினோம். ஆனால் கான்ட்ராக்டரோ எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தில் இவ்வளவு தான் கட்ட முடியும் என்று கூறினார். இப்போது பார்த்தால் முதல் நாளிலேயே மண் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகி உள்ளது என்றார்.