ஆசிரியர் பயிற்சிக்கான கவுன்சலிங் 7 ம் தேதி துவங்குகிறது 4520 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மொத்தம் 539 இருந்தன. 2013ம் ஆண்டு கணக்குப்படி ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் 2 லட்சத்து 13 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு டிஇடி தேர்வு எழுத வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதின் பேரில் ஆசிரியர் பயிற்சி படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்தது. அதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 29, அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 9, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 42 இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் 400 உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கு மொத்தம் 2800 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் 10000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிலவரப்படி மேற்கண்ட பள்ளிகளில் மொத்தம் 17000 இடங்கள் இருந்தன.
இந்த ஆண்டில் மேற்கண்ட பள்ளிகளில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. மே 14ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. ஜூன் 2ம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தேதி ஜூன் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மொத்தம் 12800 இடங்கள் இருந்தும் 4520 பேர்தான் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சலிங் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த கவுன்சலிங்கில் கலந்துகொள்ள தகுதியுள்ள மாணவ மாணவியருக்கான ரேங்க் பட்டியல், அழைப்புக் கடிதங்கள் இன்று மாலை வெளியாக உள்ளது.