போபால்:மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் தொழில் கல்வி நுழைவு தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார் என கவர்னர் அறிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் ஏராளமானவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதே போல் மருத்துவம், பொறியில் படிப்புக்கு நடத்தப்பட்ட நுழைவு தேர்விலும் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் மாநில கல்வி அமைச்சருக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தற்போது அங்கு பூதாகரமாக வெடித்துள்ளது. இதை தொடர்ந்து கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா பதவியை ராஜினாமா செய்தார். அவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். நுழைவு தேர்வு முறைகேடுக்கு பொறுப்பு ஏற்று மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என காங்கிரசார் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ராம்நரேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். உத்தரபிரதேச மாநில முதல்வராக இருந்தவர். கடந்த 2011ம் ஆண்டு இவரை ம.பி. முதல்வராக அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்தது. யாதவுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் அஜய்சிங் உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களே குற்றம் சாட்டியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த குற்றச்சாட்டுகளை யாதவ் மறுத்துள்ளார். ''நுழைவு தேர்வு விவகாரத்தில் எனது செயலர் தன்ராஜ் யாதவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தவுடன் அவரை டிஸ்மிஸ் செய்துவிட்டேன். அவர் எனது உறவினர் இல்லை. செயலர் என்பதை தவிர வேறு எந்த வழியிலும் அவருடன் எனக்கு நெருக்கம் இல்லை. இந்த ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்மீதான குற்றச்சாட்டுகளை நிருபித்தால் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன்'' என யாதவ் கூறினார். காங்கிரஸ் கவர்னர்களை டிஸ்மிஸ் செய்ய பாஜ தலைமையிலான மத்திய அரசு யோசித்து வரும் வேளையில் ம.பி.கவர்னருக்கு எதிராக ஊழல் புகார் கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.