பூந்தமல்லிசென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இன்று 5வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு முதல் இன்று காலை வரை மேலும் 10 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.சென்னை அருகே போரூர்& குன்றத்தூர் சாலையில் உள்ள மவுலிவாக்கம் பாய்கடை பஸ் ஸ்டாப் அருகருகே 11 மாடி கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. மதுரையை சேர்ந்த டிரஸ்ட் ஹைட்ஸ் என்ற நிறுவனம் கட்டிய இந்த கட்டிடப் பணியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, ஒடிசாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த சனிக்கிழமை மாலையில், வேலை முடிந்து கட்டிடத்தின் உள்ளே சம்பளம் பட்டுவாடா நடந்தது. அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை செய்தது. திடீரென இந்த 11 மாடி கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் 4 மாடிகள் மண்ணில் புதைந்தது. கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். அங்கு மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீஸ், தீயணைப்பு படையினர் மற்றும் தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து பேரழிவு மீட்பு குழுவினர் வந்தனர்.
கடந்த 4 நாட்களாக மீட்புக் குழுவினர் வெயில், மழையை பொருட்படுத்தாமல் இடிபாடுகளை அகற்றி, சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். ஒரு சிறுமி, பெண் உள்பட நேற்று வரையில் 27 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு வரை 33 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதற்கிடையே, அந்த பகுதி முழுவதும் பிணவாடை வீசுவதால், மீட்பு படையினரால் தீவிரமாக பணியாற்ற முடியவில்லை. சடலங்கள் எடுக்கப்பட்டவுடன் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை அதிகமாக தூவி வருகின்றனர். மேலும், மீட்புபடையினர் மற்றும் அப்பகுதியில் வசிப்போருக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 5வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 10 மணியில் இருந்து இன்று காலை வரை மேலும் 10 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் முற்றிலும் உருக்குலைந்து அழுகி விட்டதால் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுடன் வேலை செய்த தொழிலாளர்களால் கூட அவர்கள் யார் என அடையாளம் கூற முடியவில்லை.கட்டிடம் இடிந்த விபத்தில் இன்று காலை பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்களில் அடையாளம் தெரிந்தவர்கள் விவரம்:தமிழகத்தை சேர்ந்த மருதுபாண்டி, கணேசன், லோகநாதன், முகமது அசன், அன்பழகி, ஆந்திராவை சேர்ந்த சீனு, வெங்கட்ராவ், சங்கர், ராமு, சாந்தகுமாரி, கவுரி, ராமலட்சுமி, பத்மாவதி, ஜெயம்மா, ஒடிசாவை சேர்ந்த அமீர்குமார், அலி, நிரஞ்சன் ஆகியோரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 25 உடல்கள் மிகவும்அழுகிபோய் இருப்பதால் அடையாளம் காணமுடியாமல் உள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.