தாம்பரம் அபார்ட்மென்டில் கைவரிசை கதவை உடைத்து 30 பவுன், வெள்ளி கொள்ளை
தாம்பரம்தாம்பரம் அருகே வீட்டை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.கிழக்கு தாம்பரம் கிருஷ்ணா தெருவில் பிருந்தாவன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லட்சுமிபதி (63). இவரது மகள் பெங்களூரில் வசிக்கிறார். அவர் புதிதாக கட்டியுள்ள வீட்டுக்கு கிரக பிரவேசம் என்பதால் தனது குடும்பத்தினருடன் கடந்த 27ம் தேதி பெங்களூருக்கு சென்றார் லட்சுமிபதி.நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று வீடு திரும்பினார். கதவை திறந்து உள்ளே சென்றார். பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 30 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி, ரூ.2 ஆயிரம் ரொக்கம், 15 பட்டுப்புடவை, ஒரு லேப்டாப் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிந்தது.
இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள சந்தோஷபுரத்தில் வீடு உடைத்து 20 பவுன், சீனிவாசா நகரில் பெண்ணை கொன்று 12 பவுன், செம்பாக்கம் மணவாளநகரில் இன்ஜினியர் வீட்டை உடைத்து 25 பவுன் நகைகள் கொள்ளை என தொடர் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.