பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் மத்திய அரசிடம் மீண்டும் பொறுப்பு வைகோ கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை மீண்டும் மத்திய அரசு ஏற்க வேண்டும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை;முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2010 ஜூன் மாதம் முதல் பெட்ரோல் விலை நிர்ணயிக்கும் பொறுப்பையும், 2013 ஜனவரி மாதம் முதல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. அதிலிருந்து பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதால்தான் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்தன. இதன் விளைவாக ஒட்டுமொத்த பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட முடியாமல் விலைவாசி அதிகரித்து வந்தது.எனவே உடனடியாக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை மீண்டும் மத்திய அரசு ஏற்க வேண்டும். விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்