தொண்டு நிறுவனம் சார்பில் 21 ஜோடிகளுக்கு திருமணம்
மதுராந்தகம்: சித்தாமூர் அருகே தொண்டு நிறுவனம் சார்பில் 21 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.சித்தாமூர் அருகே பூரியம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அசேபா தொண்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில் ஆண்டு தோறும் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதுபோல் நேற்று 21 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் லோகநாதன் தலைமை தாங்கினார். இதில் சமுதாயத்தில் மிகவும் நலிந்த நிலையில் இருப்பவர்களை தேர்ந்தெடுத்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தாய், தந்தையை இழந்த 6 ஜோடிகள், தாயை இழந்த 4 ஜோடிகள், 2 கிறிஸ்தவ ஜோடியினர் உள்ளிட்ட 21 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். மேலும், தேவையான சீர்வரிசை பொருட்களும் வழங்கினர். விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் மண்டல மேலாளர் மனோகரன் செய்திருந்தார்.