மனைவி, மாமியாரை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
திருப்பதி: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலுரு நகரம் மகேஷ்வர காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவநாராயணா(31), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரம்யா. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ரம்யா கணவனுடன் கோபித்துக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். அவரை சிவநாராயணா பலமுறை அழைத்தும் வரவில்லை. நேற்று மாமியார் வீட்டுக்கு சென்ற சிவநாராயணா அங்கு தூங்கிக்கொண்டு இருந்த மனைவி ரம்யா, மாமியார் ஆகியோர் மீது தான் கொண்டு சென்ற பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் இருவரையும் ஏலுரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரித்தனர்.அப்போது, அதே பகுதியில் சிவநாராயணா தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உடனடியாக, அவரை ஏலுரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா, அவரது தாய் ஆகியோர் இறந்தனர். இதையடுத்து சிவநாராயணாவை போலீசார் கைது செய்தனர்.