நழுவிச் செல்லும் அரவிந்த்சாமி
சென்னை: வலை வீசும் இயக்குனர்களிடமிருந்து நழுவிச் செல்கிறார் அரவிந்த் சாமி. ‘பம்பாய், ‘தாலாட்டு, ‘கடல் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் அரவிந்த்சாமி. ‘கடல் படம் நடிப்பதற்கு முன் 2010ம் ஆண்டு வரை நடிப்பிலிருந்து ஒதுங்கியே இருந்தார். மணிரத்னத்தின் அழைப்பின்பேரில் ‘கடல் படத்தை ஏற்று நடித்தார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் வில்லன் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதை அரவிந்த்சாமியே மறுத்துவிட்டார். எந்த படத்திலும் வில்லனாக நான் நடிக்கவில்லை என்று கூறினார்.இந்நிலையில் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘தனி ஒருவன் என்ற பெயரில் உருவாகிறது. இதில் நயன்தாரா ஹீரோயின். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் அரவிந்த் சாமி நடிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து அரவிந்த்சாமி தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது, ‘அப்படத்தில் நான் எந்த வேடத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன். புதியபடத்தில் நடிப்பதுபற்றி இனிமேல்தான் முடிவு செய்வேன் என்றார்.