பெனாலிடி ஷூட்டில் கோஸ்டாரிகா அபாரம்
ரெசிபே நகரில் நேற்றிரவு நடந்த உலக கோப்பை 2வது சுற்று போட்டியொன்றில் கோஸ்டாரிகா-கிரீஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் இரண்டாவது பாதி துவக்கத்திலேயே கேப்டன் பிரயான் ரூயிஸ் அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது கோஸ்டாரிகா. 66வது நிமிடத்தில் கோஸ்டாரிகா தடுப்பாட்டக்காரர் ஆஸ்கார் டுயார்டே, கிரீஸ் வீரர் ஜோஸ் ஹோலேபாஸை தவறுதலாக தடுத்ததால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு கோஸ்டாரிகா தள்ளப்பட்டது. 90 நிமிட ஆட்டம் முடிந்த நிலையில் தரப்பட்ட கூடுதல் நிமிடங்களில் கிரீஸ் கோல் அடித்தது. கோல் கம்பத்தில் பந்து திரும்பி வந்த பந்தை கிரீஸ் தடுப்பாட்ட வீரர் சோக்ராடிஸ் பாபாஸ்டாதோபோலோஸ் கோலாக்கினார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது. கூடுதல் 30 நிமிடங்கள் அளிக்கப்பட்ட போதும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் டை பிரேக்கர் அமலுக்கு வந்தது.பெனால்டி ஷூட் அவுட்டில் இரு அணி வீரர்களும் வரிசையாக கோல் அடித்து வந்த நிலையில் முக்கிய திருப்பமாக கீரீஸ் வீரர் கோலை தவற விட்டார். கீரீஸ் அணியின் தியோபானிஸ் கெகாஸ் உதைத்த பந்தை கோஸ்டாரிகா கோல் கீப்பர் கெய்லோர் நவாஸ் அபாரமாக தடுத்தார். அடுத்து வந்த கோஸ்டாரிகாவின் மைக்கேல் உமானா கோல் அடிக்க 5-3 என பெனால்டி ஷூட் அவுட்டில் கோஸ்டாரிகா வெற்றி பெற்று முதல் முறையாக உலக கோப்பை காலிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. காலிறுதிப்போட்டியில் கோஸ்டாரிகா அணி, நெதர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.