சிங்க குட்டியை தத்தெடுத்த ஐநா பொது செயலாளர்
நைரோபி: ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் கென்யா சென்றுள்ளார். அங்கு தேசிய வன விலங்கு காப்பகத்தில் உள்ள சிங்க குட்டியை அவர் தத்தெடுத்துக் கொண்டார். கென்யா நாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவுக்கு நேற்று காலை பான் கீ மூன் சென்று பார்வையிட்டார். அப்போது அவரிடம் நைரோபிய காடுகளில் தாய் சிங்கத்தால் கைவிடப்பட்டு அனாதையாக சுற்றி திரிந்த 6 மாத சிங்கக் குட்டியை எடுத்து வந்து தேசிய வனவிலங்கு காப்பகத்தில் வைத்து பராமரித்து வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.
இதைத் தொடர்ந்து, அந்த சிங்கக் குட்டியை தான் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக பான் கீ மூன விருப்பம் தெரிவித்தார். இதற்கு வனவிலங்கு அதிகாரிகள் ஒப்புக்கொண்டதும், அந்த சிங்கக் குட்டிக்கு டுமைனி (நம்பிக்கை) என்று பெயர் சூட்டி, இந்த சிங்கக் குட்டி ஆரோக்கியமாகவும் பலம் வாய்ந்ததாகவும் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் வளரும் என்று பான் கீ மூன் நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் அந்த சிங்க குட்டிக்கு கரடி பொம்மை பரிசளித்து சிறிது நேரம் அதனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். இதனை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் கண்டு ரசித்தனர்.