திருஷ்டி பூசணிக்காய் தகராறு அண்ணனுக்கு சரமாரி வெட்டு தம்பி, மகன்கள் கைது
ஆவடி: ஆவடியை அடுத்த சேக்காடு வரதாபுரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வரதன் (50). கீரை வியாபாரி. அவரது தம்பி பழனி (45). எலக்ட்ரீஷியன். இவர்கள் வீடு அருகருகே உள்ளது. நேற்று முன்தினம் பழனி தனது வீட்டு வாசலில் திருஷ்டி பூசணிக்காய் உடைத்துள்ளார். இதை வரதன் கண்டித்தபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, பழனி, அவரது மகன்கள் பாலாஜி (23), மூர்த்தி (21) ஆகியோர் சேர்ந்து வரதனை அடித்து, அவரது காலில் கத்தியால் வெட்டிவிட்டனர். ரத்த கொட்டிய நிலையில் வரதன் கதறினார். உறவினர்கள் வந்ததால் பழனி அவரது மகன்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் வரதன் சிகிச்சை பெறுகின்றார். இதுபற்றி ஆவடி போலீசில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், பழனி, அவரது இரண்டு மகன்களை கைது செய்தனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.