கொழும்பு: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா.குழுவில் இடம்பெறும் வல்லுநர்களின் பெயர்களை ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை நேற்று அறிவித்தார். இலங்கை அரசு இதற்கு ஒத்துழைக்காவிட்டாலும் இதன் விசாரணை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரின் போது, ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டனர். அந்நாட்டு ராணுவம் ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, இலங்கை அரசை கண்டித்து ஐ.நா. கவுன்சிலில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை யில் விசாரணை நடத்தவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் குழுவில் இடம் பெறும் வல்லுநர்களின் பெயர்களை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை நேற்று வெளியிட்டார். அவர் கூறியதாவது:பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும், பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவருமான அஸ்மா ஜகாங்கீர், பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் நோபல் பரிசை வென்றவருமான மார்ட்டி அடிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் கவர்னர் ஜெனரலாக பணியாற்றியவருமான சில்வியா கார்ட்வ்ரைட் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு விசாரணைக்கு இலங்கை அரசு அனுமதிக்கா விட்டாலும், ஒத்துழைக்கா விட்டாலும், குழுவின் விசாரணை நடைபெறும். இவ்வாறு நவநீதம்பிள்ளை அறிவித்தார்.
ஐ.நா. குழுவில் 12 பேர் ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் தடய அறிவியல் நிபுணர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோரும் அடங்குவார்கள். இவர்களுக்கு குழுவில் இடம் பெற்ற வல்லுநர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்குவார்கள். ஐ.நா. விசாரணை குழு இம்மாத இறுதியில் தொடங்கி 2015ம் ஆண்டு ஏப்ரல் வரை 10 மாதங்கள் விசாரணை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால், இக்குழு இலங்கைக்கு வந்து விசாரணை நடத்த அனுமதி அளிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்கனவே மறுத்து விட்டார். சமீபத்தில் அந்நாட்டு நாடாளுமன்றமும் ஐ.நா. விசாரணை குழுவை ஏற்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.