பாகிஸ்தானில் ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து 2 விமானிகள் சாவு
லாகூர்:பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, பயிற்சியின் போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 விமானிகள் பலியானார்கள்.
பாகிஸ்தானில் லாகூரை அடுத்த முல்தான் நகரில் விமானப் படையினர் தினமும் இரவு நேரங்களில் ஹெலிகாப்டர்களில் சுற்றி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், முல்தான் விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சிக்கு கிளம்பியது. அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இன்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானிகளால் நீண்ட நேரம் போராடியும் அதை சரிசெய்ய முடியவில்லை. திடீரென அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் மேஜர் யாசிர் மற்றும் கேப்டன் முர்தாசா ஆகிய 2 விமானிகளும் பரிதாபமாக பலியானார்கள். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.