நைஜீரியா தலைநகரில் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு
அபுஜா:நைஜீரியாவில் வணிக வளாகத்தில் நேற்று பயங்கர குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியானார்கள்.நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் ஊஸ் 11 என்ற இடத்தில் இமாப் பிளாசா என்ற மிகப் பெரிய வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று மாலை வழக்கம் போல் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். அப்போது வணிக வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதனால், பல கடைகளுக்குள் இருந்த பொருட்கள் வெடித்து சிதறின. வணிக வளாகத்தில் சில பகுதிகளில் தீப்பிடித்து எரிந்தது. ஒரு கி.மீ. சுற்றளவுக்கு புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பரிதாபமாக பலியானார்கள். குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்கள் சிதறி வணிக வளாகத்தின் வெளியே வந்து விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
குண்டுவெடிப்பில் மேலும் 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக நைஜீரிய போலீசார் தெரிவித்தனர். இதேபோல், வடக்கு கனோவில் உள்ள மருத்துவ கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை குண்டு வெடித்ததில் 8 பேர் பலியானார்கள். கடந்த வாரம் வடகிழக்கே டமாதுரு நகரில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசிகர்கள் பார்த்து கொண்டிருந்த இடத்தில் குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள். இந்த வெடிகுண்டுகள் தாக்குதலுக்கு போகோ ஹரம் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.நைஜீரியாவில் சமீபகாலமாக நாள்தோறும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெறுகிறது. இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான போகோ ஹரம் தீவிரவாதிகளே இதில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதிகளை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.