நோயாளிகள் மோதல் ஒருவர் சாவு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை சேர்ந்தவர் கிருஷ்ணன்(50). இவர் உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரம் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே வார்டில் பக்கத்து படுக்கையில் திருவனந்தபுரம் செங்கல்சூளை பகுதியை சேர்ந்த சுதர்சனனும்(55) அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர்களுடன் மணிலால் (48) என்பவரும் அந்த வார்டில் இருந்தார்.இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது மணிலாலின் தாயார் குறித்து கிருஷ்ணன் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிலால், கிருஷ்ணணை கழுத்தை நெரித்தும், வயிற்றில் மிதித்தும் சரமாரியாக தாக்கினார். காப்பாற்ற முயன்ற சுதர்சனனையும் சரமாரியாக தாக்கினார். சத்தம் கேட்டு நர்சுகள் ஓடிவந்து கிருஷ்ணன், சுதர்சனன் ஆகியோரை மீட்டனர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.