சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை ரிப்பன் மாளிகையில் நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள், தீண்டாமை எதிர்ப்பு உறுதி மொழியை எடுத்து கொண்டனர். இதை தொடர்ந்து, திருக்குறள் வாசிக்கப்பட்டு அதற்கு மேயர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து, சிறப்பு தீர்மானங்களை வாசித்தார். அதில் அம்மா உப்பு, அம்மா மருந்தகம் கொண்டு வந்தது, சமூக வலைதளங்களில் இந்தி திணிப்பை தடுத்து நிறுத்தியது, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது, பாலாற்றின் குறிக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்தது ஆகியவற்றுக்காக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அரசியல் உள்நோக்கத்தோடு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வரை குற்றம்சாட்டியிருக்கிறார்’ என்று கூறினார். திமுக தலைவர் கருணாநிதி பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சுபாஷ் சந்திர போஸ், மண்டல குழு தலைவர் ஜோசப் சாமுவேல், நீலகண்டன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் மேயரை சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர். பின்னர், அவர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்ததும் மேயருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், ரிப்பன் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நிருபர்களிடம் சுபாஷ் சந்திர போஸ் கூறியதாவது. யாரையோ திருப்தி படுத்துவதற்காக மன்ற கூட்டத்தில் மேயர் தவறான தகவலை பதிவு செய்கிறார். சென்னையில் குடிநீரில் கழிவு நீர் கலப்பது, குண்டு குழியுமான சாலைகள், சுகாதார சீர்கேடுகள் உள்பட மக்கள் பிரச்னை பற்றி பேச விடுவதில்லை. அதற்கு மாறாக, தேவையில்லாததை பேசி திமுகவினரை வெளியேற்றுவதை குறிக்கோளாக மேயர் கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார். பின்னர், திமுக உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.