4 டன் கலப்பட டீத்தூள் பறிமுதல்
கோவை: கோவை கணபதி உடையாம்பாளையம் கணேஷ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பாலன் (51). இவர் தனது வீட்டின் அருகே ‘அசாம் தேயிலை என்ற பெயரில் டீத்தூள் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு டீத்தூளில் கலப்படம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அந்த நிறுவனத்துக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். தண்ணீரில் டீத்தூள் கொட்டியதும், அடர் கறுப்பு நிறமாக மாறியது. டீத்தூளில் கார்சிலின், சன்செட் உள்ளிட்ட சில கலர் கூட்டும் நச்சு பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 4 டன் கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.9.60 லட்சம். நிறுவனத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக டீத்தூள் நிறுவன உரிமையாளர் பாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.