சிறுமி பலாத்கார வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு சிறை
திருவனந்தபுரம்: பரவூர் சிறுமி பலாத்கார வழக்கில் தந்தைக்கு 14 வருடம் சிறை தண்டனையும் மலையாள சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.எர்ணாகுளம் அருகே உள்ள பரவூரைச் சேர்ந்தவர் சுதீர். இவரது மனைவி சுபைதா. சில வருடங்களுக்கு முன் சுதீர் தனது 14 வயது மகளை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தாய் சுபைதாவும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பரவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் மணிகண்டன் உள்பட 100க்கும் அதிகமானோரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் 7 வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டது. 8 மற்றும் 9வது வழக்குகளில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் தந்தை சுதீருக்கு 14 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமியை பலாத்காரம் செய்த மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜனதா விஜயன், இணை இயக்குநர் பிஜு நாராயணன் மற்றும் தாய் சுபைதா, புரோக்கர் மனோஜ் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அடுத்த தீர்ப்பு ஜூலை 7ம் தேதி அளிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். ஏற்கனவே ஒரு வழக்கில் தந்தை சுதீருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது