பூஜா காந்திக்கு கோர்ட் நிபந்தனை
பெங்களூர்: பூஜா காந்தி படத்தின் ஷூட்டிங் நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்தது. ‘திருவண்ணாமலை, ‘கொக்கி படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. கன்னட படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘அபிநேத்ரி என்ற கன்னட படத்தை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தனக்கு சொந்தமான கதையை திருடி பூஜா காந்தி படம் தயாரிப்பதாக பாக்யா கிருஷ்ணமூர்த்தி என்பவர் பெங்களூர் கீழ்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தின் ஷூட்டிங் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பூஜா காந்தி கர்நாடகா ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி,‘ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி படத்தை முடிக்கலாம். பின்னர் இப்படத்தின் ஒரு நகலை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு அளிக்க வேண்டும். அதை பார்த்து கதை திருடப்பட்டிருக்கிறதா என்பதுபற்றி அவர் தனது கருத்தை தெரிவிப்பார். பின்னர் அதுபற்றி விசாரித்து முடிவு செய்யப்படும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.இதுபற்றி பூஜா கூறும்போது, ‘நீதி மீதும், நீதிமன்றம் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த பிரச்னையிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவேன் என்றார்.