திருச்சி: காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னாள் துணை மேயர் ஆசிக் மீராவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி துணைமேயராக இருந்தவர் ஆசிக் மீரா(29)(அதிமுக). முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகன். இவர் மீது திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த துர்கேஸ்வரி(28) என்ற பெண் கடந்த 13ம் தேதி பொன்மலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ஆசிக் மீரா என்னை காதலித்தார். அவர் மூலம் கருத்தரித்தேன். குழந்தை பிறந்தது. தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து பொன்மலை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இளம்பெண் அளித்த புகார் மற்றும் அதிமுக மேலிட உத்தரவை தொடர்ந்து, கடந்த 16ம் தேதி திடீரென துணை மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.துர்கேஸ்வரி அளித்த புகாரை அடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது இந்திய தண்டனை 313 (கருக்கலைப்பு செய்தல்), 417 (ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல்), 376 (பலாத்காரம்), 506(1) (கொலை மிரட்டல் விடுத்தல்), 496 (சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய முடியாது என தெரிந்தும் திருமணம் செய்வதாக கூறுதல்) என 5 பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து ஆசிக் மீராவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம் ஆசிக் மீரா, முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.