உலக கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் கடைசி ஆட்டத்தில் ஈரானை எதிர்த்து விளையாடிய போஸ்னியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலக கோப்பையில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகளுக்கிடையிலான லீக் சுற்று ஆட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. நைஜீரியாவை எதிர்த்து விளையாடிய அர்ஜென்டினா தனது 3வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு ஆட்டத்தில் போஸ்னியாவை எதிர்த்து ஈரான் விளையாடியது.ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் போஸ்னியா வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. ஏற்கனவே நைஜீரியாவுடன் நடந்த ஆட்டத்தை டிரா செய்ததால் இதில் வெற்றி பெறுவதில் ஈரான் முழு கவனம் செலுத்தியது. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு தனக்கு அமையும் என ஈரான் நம்பியது. ஆனால் எந்த பலனும் இல்லை. ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் 23வது நிமிடத்திலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி போஸ்னியாவின் எடின்ஜெக்கோ முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் போஸ்னியா முன்னணியில் இருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளிலும் தலா 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் மிராலிம் ஜானிக் இரண்டாவது கோல் அடித்தார். அப்போதே போஸ்னியாவின் வெற்றி உறுதியானது. 82வது நிமிடத்தில் ஈரான் அணியின் ரேஜ்ஜன்குஜ்ஜன்ஜிகாத் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் பதிலுக்கு போஸ்னியாவின் அலிட்ஜா சாஜ்லிக் அணிக்கான 3 வது கோல் அடித்தார். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியா வெற்றி பெற்றது.ஆசிய கண்டத்தில் இருந்து இடம் பெற்ற அணிகளில் ஈரானுக்கு மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அர்ஜென்டினாவுடன் தோல்வியடைந்தபோதிலும் நைஜீரியா ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் ஒரு புள்ளியுடன் இருந்த ஈரான் இந்த தோல்வி மூலம் அந்த வாய்ப்பை பறிகொடுத்தது. ஏற்கனவே இரு ஆட்டங்களில் தோல்வியடைந்தபோதிலும் ஈரானை வீழ்த்தி 3 புள்ளிகளுடன் போஸ்னியா முதல் வெற்றியை பெற்றது.