போர்டோ அலெக்ரே நகரில் உள்ள எஸ்டாடியோ பெய்ரா ரியோ ஸ்டேடியத்தில் நேற்றிரவு 9.30 மணி க்கு நடந்த உலக கோப்பை குரூப் எப் பிரிவு போட்டி யில் அர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் மோதின. எப் பிரிவில் முதல் இடத்தில் இருந்த அர்ஜென்டினா இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி கால்பந்து உலகில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டினர். மந்திர கால் வீரரான மெஸ்சி, அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே தனது அற்புதமான ஆட்டத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே மெஸ்சி அர்ஜென்டினாவின் கோல் கணக் கைத் துவக்கினார். அர்ஜென்டினாவின் ஏஞ்செல் டி மரியா அடித்த ஷாட் நைஜீரிய கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது. அந்த பந்தை அபாரமாக கோலுக் குள் உதைத்தார் மெஸ்சி. அற்புதமான அந்த கோலால் அரங்கம் அதிர்ந்தது. ஆனால், அடுத்த நிமிடத்திலேயே பதிலடி கொடுத்தனர் நைஜீரியர்கள். மூசா தனக்கு வந்த பந்தை அர்ஜென்டினா கோலை நோக்கி உதைக்க, சுழன்று சென்ற பந்து அர்ஜென் டினா கோல் கீப்பரை ஏமாற்றி கோலுக்குள் நுழைந்தது.
முதல் பாதி ஆட்டம் நிறைவடைய இருந்த நேரத்தில் அர்ஜென்டினாவுக்கு பிரீ-கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட மெஸ்சி, எதிரணி வீரர்கள் திகைக்கும் வகையில் கோலாக்கி அர்ஜென்டினாவை மீண்டும் முன்னிலை பெற வைத்தார்.இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியதும் ஆட்டம் மீண்டும் வேகமெடுத்தது. 5 நிமிடத்தில் 2 கோல் கள் விழுந் தன. 47வது நிமிடத்தில் அர்ஜென்டினா தடுப்பாட்டத்தில் திடீரென ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி நைஜீரியாவின் 2வது கோலை அடித்தார் மூசா. இதன் மூலம் 2-2 என சம நிலை வந்தது. ஆனால், 50வது நிமிடத்திலேயே அர்ஜென்டினாவை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்தார் ரோஜோ. கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை இடது முழங்காலால் கோலுக்குள் உதைத்து அர்ஜென்டினாவின் 3வது கோலை அடித்தார் ரோஜோ. இரு அணிகளும் மேலும் கோல் அடிக்க முயன்றாலும் முடியாமல் போனது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் மெஸ்சிக்கு ஓய்வு கொடுத்து மாற்று வீரரை களமிறக்கினார் அர்ஜென்டினா கோச் அலெஜான்டிரோ சபெல்லா. இதனால், அர்ஜென்டினாவால் மேலும் கோல் அடிக்க இயலவில்லை. இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஈரான் அணி நேற்றிரவு நடந்த மற்றொரு போட்டியில் போஸ்னியாவிடம் தோல்வியடைந்ததால், நைஜீரியா அணியும் 4 புள்ளிகளுடன் அதிர்ஷ்டவசமாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.< இந்த உலக கோப்பையில் அர்ஜென்டினா விளையாடிய 3 போட்டிகளிலும் மெஸ்சி கோல் அடித்துள்ளார்.
* மெஸ்சியின் ஆட்டத்தைக் காண ஸ்டேடியத்தில் 44 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். * ‘பீலேவை விட சிறந்தவர் மரடோனா’ என்ற பாட்டை பாடினர் ரசிகர்கள். * உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்று இரவுடன் முடிவுக்கு வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்கு இரு ஆட்டங்களும், நள்ளிரவு 1.30க்கு இரு ஆட்டங்களும் நடக்கின்றன. இதை தொடர்ந்து 16 அணிகளுக்கிடையில் கால் இறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்று போட்டிகள் 28ம் தேதி தொடங்குகிறது.