சேலம்: வாழப்பாடி அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் பாமக பிரமுகர் உள்பட 5 பேர் மீது சேலம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சென்றாயம்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த பிப்ரவரி 14ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்கள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து கொன்று தூக்கில் தொங்க விட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் பூபதி, ஆனந்தபாபு, ஆனந்தன், பிரபாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் ஜாமீன்கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, 5 பேரும் தலா ரூ.1 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்தி விட்டு ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தினமும் காலை, மாலை நேரங்களில் வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.அதன்படி ரூ.5 லட்சத்தை கட்டிய 5 பேரும், சிறையில் இருந்து வெளியே வந்து தற்போது வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 5 பேர் மீதும் சேலம் மகளிர் நீதிமன்றத்தில் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘வீட்டிலிருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது, பின்னர் கொலை செய்து நிர்வாணமாக தூக்கில் தொங்க விட்டது, தடயத்தை மறைத்தது, அச்சிறுமி அணிந்திருந்த வெள்ளிகொடியை திருடியது என அவர்கள் மீது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.