சென்னை: அண்ணாநகரில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்ணாநகர் ஏ பிளாக்கை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி சுஜாதா(35). விஜயராகவன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை அவரது மனைவி சுஜாதா, அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு பி பிளாக் 11வது தெரு வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சுஜாதா கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் செயினை பறித்து கொண்டு ஓடினர். திருடன் தப்பி ஓடுவதை கண்ட சுஜாதா கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அதிர்ச்சியடைந்த சுஜாதா, அண்ணாநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் இதே பகுதியில் மற்றொரு திருட்டு சம்பவமும் நடைபெற்றுள்ளது. அண்ணாநகர் வி பிளாக்கை சேர்ந்த சங்கரநாராயணணின் மனைவி சாந்தி(65). சாந்தி தினமும் தனது வீட்டருகில் உள்ள கோயிலுக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல் கோயிலுக்கு சென்ற சாந்தி, வி பிளாக் 14வது தெரு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் அங்கு வந்த இரண்டு நபர்கள், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துவிட்டு தப்பிவிட்டனர். இதையடுத்து, சாந்தி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இரண்டு பேரின் புகார் மீதும் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். அண்ணாநகரில், நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.