உத்திரமேரூர் அருகே வாட்டர் டேங்க் அறையில் கால்நடை மருந்தகம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சிறுமயிலூரில் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அறையில் ஊரக கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. இங்கு சிறுமயிலூர், மதூர், விழுதவாடி, கோணவாடி, படூர் உட்பட 15க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 40க்கு மேற்பட்ட கால்நடைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றன.இங்கு கால்நடைகளை கட்டுவதற்கும் பரிசோதனை செய்வதற்கும் போதிய இடவசதி இல்லை. மேலும் கால்நடைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் நீர்த்தேக்கத்தொட்டி அறையில் தான் வைக்கப்படுகிறது. இங்கு மின்சார வசதி இல்லாததால் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் மருந்து, மாத்திரைகளை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. இங்குள்ள கிராம மக்கள் கால்நடைகளை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் அரசின் மூலம் வழங்கப்படும் ஆடு, மாடுகளும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கால்நடை மருத்துவமனை இங்கு அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.