அமைச்சர்கள் புது கார் வாங்க தடை நரேந்திரமோடி சிக்கன நடவடிக்கை
புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு அம்சமாக அமைச்சர்கள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும் இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம் எனவும் பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். நிதி நிலைமையை சரிசெய்ய கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதை தொடர்ந்து ரயில் கட்டணம் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது. சர்க்கரை விலையும் உயர்த்தப்பட்டது. சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையையும் படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பொது மக்களுக்கு கசப்பான மருந்தை அளித்திருப்பது போல அமைச்சரவை சகாக்களுக்கும் கசப்பு மருந்தை மோடி அளித்துள்ளார். அவரது சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைச்சர்கள் புதிய கார்கள் வாங்க தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்யும் போது அதற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் எனவும் அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.