புதுடெல்லி: டுவிட்டர் சமூக வலைதளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்களை கவனிப்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தொட்டுள்ளது. இதன்மூலம், டுவிட்டரில் அதிகமாக பின்பற்றப்படும் உலக தலைவர்கள் வரிசையில் 4வது இடத்தை நரேந்திர மோடி பிடித்துள்ளார். முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளார். இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனக்கென பக்கம் வைத்துள்ளார். எந்த விஷயம் குறித்தும் உடனடியாக வலை தளங்களில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனை லட்சக்கணக்கான பேர் தினந்தோறும் ரசித்து வருகிறார்கள். அவரது கருத்தை பலர் பாராட்டியும், ஒரு சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபரில் நரேந்திர மோடி டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். அதன்பின், அவர் தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
பொதுவாக பிரபலமானவர்களின் டுவிட்டர் செய்திகளை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த வகையில் உலக தலைவர்களின் டுவிட்டர் ரசிகர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி 6வது இடத்தில் இருந்தார். கடந்த வாரம் அவர் 5வது இடத்துக்கு முன்னேறினார். இவருக்கு அடுத்த இடத்தில் துருக்கி அதிபர் அப்துல்லா குல் இருந்தார். அந்த சமயத்தில், அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் டுவிட்டர் பக்கம் 4வது இடத்தில் இருந்தது. நேற்றைய கணக்குபடி 49 லட்சம் ரசிகர்களுடன் மோடி 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, 4 ஆயிரம் ரசிகர்கள் குறைவாக பெற்று 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், அமெரிக்க அதிபர் ஒபாமாவையே டுவிட்டரில் தற்போது 4 கோடி 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் போப் ஆண்டவரின் 9 மொழிகளில் உள்ள டுவிட்டர் பக்கங்களை 1 கோடி 40 லட்சம் பேர் கவனிக்கிறார்கள். 3வது இடத்தில் இந்தோனேயாவின் அதிபர் சுசிலோ பாம்பாங் யுதயோனா 50 லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளார். தற்போது 4வது இடத்துக்கு மோடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.