குடிநீர் கோரி மக்கள் மறியல்
தண்டையார்பேட்டை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை பொன்னுசாமி தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு ஆகியவற்றில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஒரு மாதமாக குழாய்களில் சரியாக குடிநீர் வரவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு புகார் செய்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், இன்று காலை 11 மணியளவில் 100 பெண்கள் உள்பட 200 பேர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டவர்கள், குடிநீர் கோரி கோஷமிட்டனர். இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.