சென்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் பலி மேலாளர்கள் கைது
வி.கே.புரம்: வி.கே.புரம் சென்ட் தொழிற்சாலையில் நள்ளிரவில் பாய்லர் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். இது தொடர்பாக ஆலை மேலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே திருப்பதியாபுரத்தில் ரூபி டிராகன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு கிராம்பு இலையில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்றிரவு சென்ட் தயாரிப்பு பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஒருவர் பாய்லரில் நெருப்பு வைக்கும் பணியில் ஈடுபட்டார். மற்ற 3 பேர் கிராம்பு இலைகளை பாய்லரில் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மூலிகை இலைகளை பாய்லரில் அவிக்கும் பணி முடிந்த பின்னர் ஊழியர்கள் முரளிகிருஷ்ணா, தமிழ்மணி ஆகியோர் பாய்லரை திறக்க முயன்றனர். அப்போது பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் டானாவை சேர்ந்த ஆழ்வார்சாமி மகன் முரளிகிருஷ்ணன்(31), வனராஜ் மகன் தமிழ்மணி(25) ஆகிய இருவரும் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மற்றொரு தொழிலாளி மேலகொட்டாரத்தை சேர்ந்த இசக்கி மகன் அழகுநம்பி(32) லேசான காயத்துடன் தப்பினார்.சம்பவ இடத்திற்கு வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் மாடசாமி, கடையம் இன்ஸ்பெக்டர் சிவமுருகன் மற்றும் போலீசார் சென்று பலியான 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அழகுநம்பியை சிகிச்சைக்காக சேர்த்தனர்.விபத்து தொடர்பாக வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் மாடசாமி விசாரித்து தொழிற்சாலை மேலாளர்கள் கொட்டாரம் தம்பிரான் மகன் கென்னடி மற்றும் டானாவை சேர்ந்த நல்லகண்ணு மகன் பாலச்சந்தர் ஆகிய இருவரையும் கைது செய்தார்.சென்ட் தொழிற்சாலை உரிமையாளர் கேரளாவை சேர்ந்த ராமதாஸ். இவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். விபத்து காரணமாக அவரை போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனால் வி.கே.புரம் விரைந்துள்ளார்.