மதுரை மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதல் 15 பேர் வேறு சிறைக்கு மாற்றம்
மதுரை: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளர்கள் 13 பேரை கடந்த 16ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்தது. இவ்வழக்கில் சரணடைந்த ராமர், ராஜா, கனி, ஜெகவீரன், சரவணன், மகாராஜா ஆகியோர் மதுரை மத்திய சிறையில் நேற்று முன்தினம் இரவு அடைக்கப்பட்டனர். 2012ல் தேவர் குருபூஜைக்கு சென்று வேனில் திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேரை கொன்ற வழக்கில் ராமர் முக்கிய குற்றவாளி. ராமரை மதுரை சிறைக்குள் அடைப்பதற்கு அங்குள்ள கைதிகள் முருகன் என்ற வேல்முருகன், லோடுமுருகன், சதாம் உசேன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை மதுரை மத்திய சிறையில் ராமர் உள்ளிட்ட சில கைதிகள் குளிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த வேல்முருகன், லோடுமுருகன், சதாம்உசேன் ஆகியோர் ராமரை தாக்க பாய்ந்தனர். அங்கு காவலுக்கு இருந்த ஜெயிலர் ஜெயராமன் தலைமையிலான சிறை போலீசார் அவர்களை தடுத்தனர். இதில் ஆத்திரமடைந்த கைதிகள் கல்வீச்சில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து விசாரித்த சிறை டிஐஜி முகம்மதுஹனீபா, மோதலில் ஈடுபட்ட இரு தரப்பை சேர்ந்த 15 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.