செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் செங்கல்பட்டு நகருக்குள் வந்து செல்ல வசதியாக, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே ரூ.34 கோடியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2 வாரத்துக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களோ வரும் பஸ்களோ செங்கல்பட்டு நகருக்குள் வருவதில்லை. பைபாஸ் சாலையில் சென்று விடுகிறது.இதனால், வெளியூர் பயணிகள் செங்கல்பட்டு பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் சுமார் 3 கிமீ தூரமுள்ள பைபாஸ் சாலைக்கு சென்று, அங்கிருந்து டவுன் பஸ் மூலம் தாம்பரம் அல்லது மேல்மருவத்தூர் சென்று சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால், புதிய பாலம் கட்டி முடித்தும் பயனில்லாமல் உள்ளது.இது குறித்து பயணிகள் கூறுகையில், செங்கல்பட்டு, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் திருச்சி, மதுரை, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல செங்கல்பட்டு வந்து சென்றனர். புதிய மேம்பாலம் கட்டும் பணி முடிந்தால் அனைத்து பஸ்களும் செங்கல்பட்டு நகருக்குள் வரும் என நினைத்தோம். ஆனால் பைபாஸ் வழியாக செல்கிறது. இதனால் 3 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை செங்கல்பட்டு நகர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.