ரிலீஸ் ஆன படத்தில் நடிக்க போகிறார் சமுத்திரக்கனி
சென்னை: ரிலீஸ் ஆன படத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி.டி.ராஜேந்தர் இயக்கிய ‘ஒரு தலை ராகம் என்ற படம் ரிலீஸ் ஆனபோது ஓடவில்லை. சில வாரங்கள் கழித்து ரீ ரிலீஸ் செய்தபோது சக்கைபோடு போட்டது. அதேபோல் ‘சித்திரம் பேசுதடி என்ற படமும் ரிலீஸின்போது பாப்புலர் ஆகவில்லை. ரீ ரிலீஸ் செய்தபோது வெற்றிகரமாக ஓடியது. இதெல்லாம் காதல், கமர்ஷியல் அம்சம்கொண்ட படங்களாக அமைந்தன. இதிலிருந்து மாறுபட்டு கர்மவீரர் காமராஜின் வாழ்க்கை சரித்திரமாக உருவான படம் ‘காமராஜ். பாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் என்பவர் நடித்தார். இப்படம் கடந்த 2004ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது அப்படம் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு இப்படம் மாற்றப்பட்டிருப்பதுடன் கூடுதலாக 30 நிமிட காட்சிகளை படமாக்கி இணைக்கின்றனர். இதில் சமுத்திரக்கனி நடிக்கிறார். சுதந்திர போராட்ட தியாகி யின் மகனாக அவர் வேடம் ஏற்கிறார். இதற்கான காட்சிகள் படமாக்க உள்ளனர். அடுத்த மாதம் காமராஜரின் 112வது பிறந்த நாளன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.