பிரேசில் நாட்டில் பிரேசிலியா நகரில் நேற்று நள்ளிரவு 1.30க்கு நடந்த உலக கோப்பை போட்டியொன்றில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் மற்றும் கேமரூன் அணிகள் மோதின. சொந்த அணி மோதும் போட்டியைக் காண அரங்கில் 69 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர். நெய்மரின் மந்திர கோல்களைக் காண அவர்கள் துடித்துக் கொண்டிருந்தனர். போட்டியில் எதிரணியினர் முரட்டு ஆட்டம் ஆடிய போதும், நெய்மர் தனது ரசிகர்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றமளிக்கவில்லை. இந்த போட்டியில் அவர் பந்தை கடத்திச் சென்ற விதம், நளினமான முறையில் கோல் அடித்தது ஆகியவை பிரேசில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது எனலாம். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிரேசிலின் கோல் கணக்கை துவக்கினார் நெய்மர். பிரேசில் நடுகள வீரர் லூயிஸ் கஸ்டாவோவிடம் இருந்து கிராஸ் முறையில் தாழ்வாக வந்த பந்தை பெனாலிடி ஏரியாவுக்குள் இருந்த நெய்மர் கோலாக்கினார். ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் இதற்கு பதிலடி கொடுத்தனர் கேமரூன் அணியினர். மாடிப் அடித்த கோல் மூலம் 1-1 என சமன் செய்தது கேமரூன். துடிப்பான ஆட்டத்தை கேமரூன் அணியினர் வெளிப்படுத்தினர். இந்நிலையில், 34வது நிமிடத்தில் லெப்ட் பேக் பகுதி வீரர் மார்செலோவிடம் இருந்து வந்த பந்தை கோலாக்கியதன் மூலம் பிரேசில் அணி அசைக்க முடியாத முன் னிலை பெற வைத்தார் நெய்மர். முதல் பாதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன் னிலை பெற்றிருந்தது.இரண்டாவது பாதி யிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர் பிரேசில் வீரர்கள். ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் பிரெட் அபாரமாக ஒரு கோல் அடித்தார். இதன் பின்னர் 84வது நிமிடத்தில் பிரேசில் அணி மற்றொரு கோலை அடித் தது. இந்த முறை கோல் அடித்தவர் பெர்ணான்டின்கோ. இதன் மூலம் கேமரூன் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது பிரேசில். இந்த வெற்றியால் குரூப் ஏ பிரிவில் பிரேசில் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.