முன்விரோத தகராறில் சென்னையை சேர்ந்தவர் கல்லால் அடித்து கொலை
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே முன்விரோத தகராறில் சென்னையை சேர்ந்தவரை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தம் கிராமம் நாச்சிபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் காது குத்து விழா நாச்சிபட்டியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு வந்த உறவினர்கள் சென்னையை சேர்ந்த மணி (47), குஜிலியம்பாறை அருகே கோவிலூரை சேர்ந்த கார்த்திக் (22) ஆகியோருடன் முனியாண்டி கோயிலில் இரவில் தங்கியுள்ளார். கார்த்திக் மற்றும் மணி குடும்பத்தினரிடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மணியின் தலையில் கார்த்திக் கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.