சென்னை: போலி பாஸ்போர்ட், விசா மூலம் 400 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள் சிக்குகின்றனர். போலி பாஸ்போர்ட், விசா கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்ல சிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர், இது தொடர்பாக சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள ராஜன் (42), புரசைவாக்கம் முகமது அபுபக்கர் சித்திக், மூர்த்தி, ஆலப்பாக்கம் சிவரங்கன் (55), திருவான்மியூர் தேவ சகாயம் பேட்ரிக் ஸ்ரீதர் (48), மதுரவாயல் ஜெயராஜசேகரன் என்ற ஜூலி (29) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில், முகமது அபுபக்கர் சித்திக் தவிர மீதம் உள்ள 5 பேரும் இலங்கை தமிழர்கள். மூர்த்தி மூளையாக இருந்து செயல்பட்டார். 6 பேரையும் நேற்று போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்கள் போலி விசா மற்றும் பாஸ்போர்ட் தயார் செய்து சுமார் 400 பேரை கனடா, ஆஸ்திரேலியா உள்பட 53 நாடுகளுக்கு அனுப்பி வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
இதற்காக ஒரு போலி பாஸ்போர்ட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரையும், விசாவுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையும் வசூல் செய்துள்ளனர்.மோசடி கும்பல் பெரும்பாலும் 99 சதவீதம் இலங்கை தமிழர்களுக்கே போலி விசா மற்றும் பாஸ்போர்ட்களை தயார் செய்து கொடுத்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து விடுதலைப் புலிகள் வெளிநாடு தப்பி சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே, போலி விசா மற்றும் பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர்களின் பட்டியலை தயார் செய்யவும், இதற்கு உடந்தையாக விமான நிலையத்தில் இருந்தகுடியுரிமை அதிகாரிகளை அடையாளம் காணவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாக உள்ளன.
போலி விசா தயாரித்தது எப்படி?சம்பந்தப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட்களை மூர்த்தி கும்பல் வாங்கி வைத்துக் கொள்வார்கள். பின்னர், அந்த பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தொழில் நுட்ப முறையில் நீக்கப்படும். போலி நபர்களின் போட்டோ உள்பட அனைத்து தகவல்களும் அதில் பதியப்படும். பின்னர், அதில் ஒரு போலியான விசா இணைக்கப்படும். அதில், வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று வந்தது போல் போலியான சீல் வைப்பார்கள். பின்னர், இதை அடிப்படையாக வைத்து புதிய விசா விண்ணப்பிக்கப்படும். ஏற்கனவே, ஒரு முறை வெளிநாடு சென்று வந்ததால் அதிகாரிகள் அதை அதிகம் சோதனை செய்து பார்க்க மாட்டார்கள். உடனடியாக புதிய விசா வழங்கப்படும் இதைத் தொடர்ந்து பழைய விசாவை கும்பல் கிழித்து போட்டு விடுவார்கள். இப்படிதான் 400 பேரும் வேறு நாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர். இதற்கு துணையாக குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் செயல்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.