உலக கோப்பை போட்டியில் தென்கொரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்தது அல்ஜீரியா.பிரேசில் நாட்டில் போர்டோ அல்ஜிரி நகரில் நேற்று நள்ளிரவு நடந்த குரூப் எச் பிரிவு உலக கோப்பை போட்டியில் தென்கொரியா-அல்ஜீரியா அணிகள் மோதின. 26வது நிமிடத்தில் சிலிமானி தன்னிடம் வந்த பந்தை தனி நபராக கடத்திச் சென்றார். 2 தென்கொரிய தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி பந்தை கொண்டு சென்ற சிலிமானி, தென் கொரிய கோல்கீப்பர் ஜங்-சுங்-ரியாங்கையும் ஏமாற்றி முதல் கோலை அடித்தார். அடுத்த 2வது நிமிடத்திலேயே அல்ஜீரியாவின் ரபீக் ஹாலிக், கார்னர் பகுதியில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை தலையால் முட்டி அடுத்த கோலை அடித்தார். 38வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தது அல்ஜீரியா. பெனாலிடி ஏரியாவுக்குள் இருந்த போது தனது காலுக்கு வந்த பந்தை அற்புதமாக உதைத்து கோலாக்கினார் அப்டெல்மவுமெனே டாபோ.
முதல் பாதி முடிவில் அல்ஜீரியா 3-0 என்ற கோல் கணக்கில் அசைக்க முடியாத முன்னிலையை பெற்றிருந்தது. இரண்டாவது பாதி துவங்கியதும் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கினர் தென்கொரிய வீரர்கள். 48வது நிமிடத்திலேயே அதற்கு பலன் கிடைத்தது. கொரியாவின் சோன் ஜியூங்-மின் அடித்த அபார ஷாட் கோலாக மாறியது. இந்நிலையில், 62வது நிமிடத்தில் அல்ஜீரியா மீண்டும் ஒரு கோல் அடித்தது. யாசினி பிரஹீமி தன்னிடம் வந்த பந்தை கோலாக்கினார். தொடர் கோல்களால் அதிர்ச்சியடைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கினர் கொரிய வீரர்கள். 72வது நிமிடத்தில் தென்கொரிய கேப்டன் கோஜா-சியோல் கோல் எல்லைக்கு அருகில் தன்னிடம் வந்த பந்தை கோலாக்கினார். 32 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் 4-2 என்ற கோல் கணக்கில் உலக கோப்பை போட்டியொன்றில் வெற்றி பெற்றது அல்ஜீரியா. ஆப்ரிக்க அணி ஒன்று உலக கோப்பை போட்டியில் 4 கோல்கள் அடிப்பதும் இதுவே முதல்முறை.