கவர்னர்களாக பணியாற்றும் கேரள காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக வேண்டும் மூத்த தலைவர் போர்க்கொடி
திருவனந்தபுரம்: கவர்னர்களாக பணியாற்றும் கேரள காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.மத்தியில் தற்போது புதிதாக அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களை நீக்க முடிவு செய்தது. இதனையடுத்து உத்தரபிரதேச கவர்னர் ஜோஷி பதவி விலகினார். மேலும் கேரள கவர்னர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட கவர்னர்களை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.இதற்கிடையில் கவர்னர்களாக பணியாற்றும் கேரள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பந்தளம் சுதாகரன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கேரள காங்கிரஸ் தலைவர்களான சங்கர நாராயணன் மகாராஷ்டிரா கவர்னராகவும், வைக்கம் புருஷோத்தமன் மிசோரம் கவர்னராகவும் பணியாற்றி வருகின்றனர். கவர்னர்களை பதவியில் இருந்து விலக்கும் விவகாரத்தில் பாஜ அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே நாம் அதற்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பாஜ அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே கவர்னர்களாக பணியாற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களான சங்கரநாராயணனும், புருஷோத்தமனும் பதவி விலக வேண்டும். அவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த மாநிலமான கேரளாவுக்கு திரும்பி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.