திருவிடைமருதூர்:திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் இன்று நடந்த ராகு பெயர்ச்சி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கீழ பெரும்பள்ளம் கோயிலில் நடந்த கேதுபெயர்ச்சி விழாவிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குவது நாகநாதசுவாமி கோயில். இங்கு மட்டுமே ராகுபகவான் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்களராகுவாக வீற்றிருக்கிறார். இக்கோயிலில் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ராகுபெயர்ச்சி விழா நடைபெறும். இன்று காலை 11.18 மண¤க்கு துலாம் ராசியில் இருந்து கன்னிராசிக்கு ராகு பெயர்ச்சியடைந்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசித்தனர். வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். பரிகார ராசிக்காரர்களாகிய ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்
அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டனர். விழாவையொட்டி பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. விழாவையொட்டி கோயில் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான தற்காலிக கடைகள் முளைத்திருந்தன. ராகுபெயர்ச்சி விழாவையொட்டி பரிகார ராசிகளுக்கு முதல்கட்ட லட்சார்ச்சனை கடந்த 17ம் தேதி நடந்தது. வரும் 23ம் தேதி 2ம் கட்ட லட்சார்ச்சனை நடக்கிறது.
கேது பெயர்ச்சி: நாகை மாவட்டம், பூம்புகார் அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயில் கேது பரிகார தலமாக உள்ளது. ஞானகாரகன் என அழைக்கப்படும் கேதுபகவான் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கிறார். அதன்படி இன்று காலை 11.12 மணிக்கு மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு கேது பகவான் இடம்பெயர்ந்தார். இதனால், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்களான மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்ராசிக்காரர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். '