வாஷிங்டன்:பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பரில் அமெரிக்காவுக்கு செல்லும் போது, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என தெரிகிறது. நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002&ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கலவரத்தை அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தடுக்க தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலித்தன. இந்த விவகாரத்தை காரணம் காட்டி, அவருக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, பிரதமராக மோடி கடந்த மே 26&ம் தேதி பொறுப்பேற்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், அமெரிக்கா வுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு மோடி பயணம் மேற்கொள்வார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரும்போது, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் அவரை உரையாற்ற அழைக்க வேண்டுமென கலிபோர்னியாவை சேர்ந்த குடியரசு கட்சி எம்.பி.யும், அமெரிக்க வெளியுறவு துறை எம்.பி.கள் குழு தலைவருமான எட் ராய்ஸ், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் போஹ்னருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும், தெற்காசிய நாடுகளில் நமது முக்கியமான நட்பு நாடான இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். இந்த கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் பரிசீலித்து வருகிறார். இது வரை அவர் முடிவு அறிவிக்காவிட்டாலும் மோடியை உரையாற்ற அவர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.