விபத்தில் சிக்கிய டிரைவர்களுக்கு வேலை வழங்காமல் இழுத்தடிப்பு
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகின்றன. அப்போது காயம் ஏற்படும் டிரைவர், கண்டக்டர்கள் மருத்துவ சான்றிதழ் பெற்று போக்குவரத்துக்கு கழகத்திலேயே அவர்களுக்கு தகுந்தாற்போல் பணி மேற்கொள்வது வழக்கம். தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகம், அந்த ஊழியர்களை 3 மாதத்துக்கு ஒருமுறை மருத்துவ சான்றிதழ் கேட்பதாகவும் அதுவரை பணி வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: விபத்தில் காயம் ஏற்பட்ட டிரைவர் மற்றும் கண்டெக்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டைம் கீப்பராகவும், அலுவலக பணியாளராகவும் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் வரை சென்று போராடியே அந்தப்பணியையும் பெற்றுள்ளனர். ஆனால் நிர்வாகத்தினரோ அவர்களை 3 மாதத்துக்கு ஒருமுறை மருத்துவ சான்று பெற்று வர வேண்டும் என கூறுவதோடு, ஒரு மாதம் வரை பணியும் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நிர்வாகம் ஊழியர்களின் நலன் கருதி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.