அண்ணியுடன் கணவர் ஓட்டம் மனைவி புகார் மீது வழக்கு பதிவு அயனாவரத்தில் பரபரப்பு
சென்னை: கணவர் தனது அண்ணியை திருமணம் செய்து குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டதாக மனைவி கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூரை சேர்ந்த ஸ்டெல்லா சகாய ராணி அயனாவரம் போலீசில் கொடுத்த புகாரில் கூயிருப்பதாவது: எனக்கும் அயனாவரத்தை சேர்ந்த குமாருக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்தின்போது 40 சவரன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும், திருமணச் செலவுக்காக ரூ.60 ஆயிரமும் கொடுத்தோம். குழந்தைகள் பிறக்கும்வரை பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தது. எனது கணவர் கடந்த 2013 பிப்ரவரி முதல் வீட்டுக்கு வருவதை நிறுத்தினார். விசாரித்ததில் அவருக்கும் அவரது அண்ணனின் மனைவிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக எனது கணவரிடம் கேட்டதற்கு, நான் அண்ணியுடன்தான் வாழ விரும்புகிறேன். நீ விவாகரத்து கொடுத்துவிடுஎன்று மிரட்டுகிறார். அவர்கள் இருவரும் சென்னையில் பதிவு திருமணம் செய்துள்ளனர். எனது குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு என்னை விவாகரத்து செய்யுமாறு மிரட்டும் எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மீது விசாரணை நடத்திய அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார் குமார் மீது வரதட்சணை கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.