தமிழகத்தில் கடந்த காலங்களில் கடும் மின்வெட்டு அமலில் இருந்தது. இதனால், ஏராளமான சிறு தொழில் கூடங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மின்வெட்டால் மக்கள் இன்னும் எண்ணற்ற துயரங்களை அனுபவித்தனர். தற்போது மின்வெட்டு குறைந்திருக்கிறது. ஜூனில் இருந்து மின்வெட்டே இருக்காது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தாலும் சில இடங்களில் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அத்துடன், சென்னை மற்றும் புறநகர்களில் குறைந்த மின் அழுத்தம் மற்றும் சீரற்ற முறையில் மின்விநியோகம் செய்யப்படுவதால் மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.இந்த சூழ்நிலையில், கூடங்குளம் முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை எட்டியுள்ளது மகிழ்ச்சி தரும் விஷயம்தான். அணு மின்நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு மட்டுமின்றி, மக்களின் உயிருக்கும் ஆபத்து என எதிர்ப்பாளர்கள் ஒரு புறம் போராடிக் கொண்டிருக்க, பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக பின்பற்றி வருகிறோம் என அணுசக்தி கழகம் இன்னொரு புறம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த சர்ச்சைக்கு இடையே 1000 மெகாவாட் உற்பத்தி திறன் எட்டப்பட்டுள்ளது.
இந்திய-ரஷ்ய கூட்டு திட்டத்தில் தொடங்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் அணு உலையின் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி முதல் முறையாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, இப்போது முழு திறன் எட்டப்பட்டாலும், 15 நாட்கள் ஆய்வுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள், இந்திய அணுசக்தி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின்பு 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும்.இதற்கிடையே, இங்கு உற்பத்தியாகும் ஆயிரம் மெகாவாட்டில் 540 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்துக்கு தரப்படும் என அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்திருக்கிறார். பல்வேறு போராட்டங்களை கடந்து இறுதியில் இந்த அணுமின்நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சில ஆண்டுகளுக்காவது முழுமையாக தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுதான் நியாயமானது. தற்போது மத்திய அரசுக்கு ஆதரவாகவே தமிழக அரசின் நிலைப்பாடுகள் உள்ளன. எனவே, மத்திய அரசிடம் பேசி, சில ஆண்டுகளுக்கு மட்டுமாவது ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்துக்கு பெற வேண்டும். அதன்மூலம், மின்சார பற்றாக்குறையை சமாளிக்கலாம்.