வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் கடந்த மாதம் சோதனை நடத்தி ரூ.4 கோடி பணமும், 73 சவரன் நகைகளும் கைப்பற்றினர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவை மோகானாம்மாள் என்ற கரகாட்டப் பெண்ணுக்கு உரியவை என்பதுதான். இந்த பெண்ணிடம் எப்படி இவ்வளவு பணம் கொட்டியது என்பது கேள்வி. கரகம் ஆடுபவர்களுக்கு கூட தலை சுற்றாது. ஆனால், இந்த கரகாட்டக்கார பெண்ணின் கதையை கேட்பவர்களுக்கு தலை சுத்தும். இவர் செம்மரக் கடத்தலில் தொடர்புடையவர் என்பதும், கரகாட்டம் ஆடி வந்தாலும் செல்வச் செழிப்பில் மிதந்தார் என்பதும் தற்போது பத்திரிகைகளில் கதை, கதையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சந்தனக் கடத்தல் வீரப்பன் கதை போல, சமீப காலமாக செம்மரக் கடத்தல் செய்திகள் ஆந்திராவிலும், தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. செம்மரம் எனப்படும் சிவப்பு சந்தன மரம், ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களை உள்ளடக்கிய சேஷாசலம் மலைப் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. சேஷாசலம் மலைப்பகுதி என்பது, சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, ஆஞ்னாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வெங்கடாத்ரி ஆகிய ஏழு மலைகளை உள்ளடக்கியது. இதில் வெங்கடாத்ரி மலைதான் வெங்கடலாஜலபதி பெருமாள் கோயில் உள்ள திருமலை. இந்த சேஷாசலம் மலைப்பகுதிகளில் செம்மரங்கள் அதிகமாக விளைவதால் வெட்டி கடத்தும் தொழிலும் அமோகமாக நடக்கிறது.
சமீப காலமாக இந்த கடத்தலில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகமாக ஈடுபடுகிறார்கள். ஆரம்ப காலத்தில் ஆந்திர வனத்துறையினரும், கடத்தல்காரர்களுடன் கைகோர்த்திருந்ததால், அவர்கள் சிக்கியதில்லை. தற்போது ஆந்திர அரசு உஷாராகி, வனத்துறை மற்றும் போலீசாரை முடுக்கி விட்டுள்ளது. இதனால், கடத்தல்காரர்கள் அடிக்கடி போலீசாருடன் மோதுகிறார்கள். சமீபத்தில் 3 பேர் என்கவுடன்டரில் கொல்லப்பட்டனர். தற்போது, கரகாட்டக்கார பெண் மோகனாம்மாள் சிக்கியிருக்கிறார். அவரை விசாரித்தால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த சூழ்நிலையில் செம்மர கடத்தலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என தமிழக போலீசார் அலட்சியமாக விட்டு விடக் கூடாது. சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் அதிகரித்தால், அது பின்னாளில் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, செம்மரக் கடத்தல்காரர்களை முழுமையாக ஒடுக்குவதற்கு ஆந்திர போலீசாருடன், தமிழக போலீசாரும் இணைந்து செயல்பட வேண்டும். ஆரம்ப காலத்திலேயே இணைந்து செயல்பட்டால், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் போன்று செம்மரக் கடத்தல் தாதா யாரும் உருவாகி விடாமல் தடுக்கலாம்.