தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு எரிபொருளாக பிரித்து எடுக்க மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதில் துறைமுகத்தில் இருந்து காசிமேடு எஸ்என் செட்டி தெரு வழியாக செல்லும் பைப் லைனில் நேற்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டு பீய்ச்சியடித்தது. உடனே பைப் லைன் ஆயில் ஓட்டம் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு முழுவதும் இந்த பணி நடந்தது. இன்றும் 2வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. உடைப்பை சரி செய்த பிறகு மீண்டும் அதே பைப் லைனில் ஆயிலை செலுத்தி வேறு எங்கேயாவது வெளியேறுகிறதா என்பதை ஆய்வு செய்ய உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆய்வு நடத்த எண்ணெய் நிறுவனம் 5 பேர் குழுவை அமைத்துள்ளது. அவர்கள், இன்று முதல் ஆய்வு செய்வார்கள் என தெரிகிறது.