திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் பழுதடைந்து கிடக்கும் சிக்னல்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அவற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோயில், முக்கிய வர்த்தக நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளன. பள்ளிக்கு செல்லவும், அலுவலகம் செல்லவும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் நகருக்கு வருகின்றனர்.சென்னையில் இருந்து திருத்தணி, திருப்பதி உட்பட பல முக்கிய இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் திருவள்ளூர் நகரை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால் நகரில் வாகன போக்குவரத்து மட்டுமின்றி பொதுமக்கள் புழக்கமும் அதிகரித்துள்ளது. அதிக வாகனங்களால் அடிக்கடி ஏற்படும் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருவள்ளூர் ஆயில்மில், ஆவடி சாலை சந்திப்பு, உழவர் சந்தை, காமராஜர் சிலை, எம்ஜிஆர் சிலை, டோல்கேட், தேரடி, செங்குன்றம் சாலை சந்திப்பு, மணவாளநகர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.
இந்த சிக்னல்கள் அனைத்தும் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே இயங்கின. அதன்பிறகு ஒவ்வொன்றாக பழுதாகி தற்போது காட்சி பொருளாக உள்ளது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி விபத்து நடப்பதும் தொடர் கதையாக உள்ளது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் போலீசார் காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே பணி செய்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு போதும் போதுமென்றாகிவிடுகிறது.மாலை 6 மணிக்கு மேல் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பட்டன் லைட் வழங்கப்பட்டது. ஆனால் லைட் தற்போது பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும்போது போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுவதே தெரியவில்லை. எனவே, திருவள்ளூர் நகரில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் பழுதடைந்த சிக்னல்களை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.